புதுப்பட்டியில், சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


புதுப்பட்டியில், சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-21T22:21:12+05:30)

புதுப்பட்டியில், சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த 5–வது வார்டு பாரதி நகரில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 5 மாத காலமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அவர்கள் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி நகர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த 5 மாதமாக தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். தங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், எரியாமல் இருக்கும் தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்

தர்ணா

இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த போதிலும், பேரூராட்சி செயல் அலுவலர் வராமல் கலைய மாட்டோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து பேரூராட்சி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செயல் அலுவலர் விடுப்பில் சென்று இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் புதுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story