கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி


கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 21 Jun 2017 9:30 PM GMT (Updated: 21 Jun 2017 6:28 PM GMT)

முக்கூடல் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து அமுக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

கடையம்,

முக்கூடல் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து அமுக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

கிணறு தோண்டும் பணி

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள துப்பாகுடியை சேர்ந்தவர் ராமநாதன். என்ஜினீயர். இவருக்கு சொந்தமான தோட்டம் துப்பாகுடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராவுத்தபேரியில் வடக்குவாசெல்வி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ளது.

இந்த தோட்டத்தில் புதிதாக கிணறு தோண்டும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்த கிணறு தோண்டும் பணியை தொழிலாளியான கீழகுத்தபாஞ்சான் வேதகோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம்(வயது40) என்பவர் காண்டிராக்ட் எடுத்து மேற்கொண்டு வந்தார்.

மண் சரிந்து விழுந்தது

நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆறுமுகம், கலிதீர்த்தான்பட்டியை சேர்ந்த தங்கராஜ்(22) உள்பட மொத்தம் 8 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மதியம் 1 மணியளவில் ஆறுமுகம், தங்கராஜ் உள்பட 3 பேர் கிணற்றுக்கு உள்ளேயும், 5 பேர் மேலேயும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று கிணற்றின் ஒரு பகுதியில் இருந்து மண் சரிந்து விழுந்தது. இதில் கிணற்றுக்குள் இருந்த தங்கராஜ், ஆறுமுகம் ஆகியோர் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில் அவர்கள் மூச்சு திணறி உயிருக்கு போராடினர்.

2 தொழிலாளர்கள் சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், மண்ணுக்கு அடியில் சிக்கிய தங்கராஜ், ஆறுமுகம் இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தங்கராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ஆறுமுகத்தை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான தங்கராஜுக்கு அஸ்மிதா என்ற மனைவியும், கவுசிகா என்ற 2 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ஆறுமுகத்துக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

Related Tags :
Next Story