மாநில நிதிக்குழு மானியத்தை ஊராட்சிகளில் பயன்படுத்திட வேண்டும்


மாநில நிதிக்குழு மானியத்தை ஊராட்சிகளில் பயன்படுத்திட வேண்டும்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:26 PM GMT)

மாநில நிதிக்குழு மானியத்தை ஊராட்சிகளில் பயன்படுத்திட வேண்டும் தமிழக அரசு உத்தரவு

சிவகங்கை,

14–வது மாநில நிதிக்குழு மானிய நிதியினை ஊராட்சி அளவிலான திட்டமிடல் மூலம் பயன்படுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உத்தரவின் படி 14–வது மாநில நிதிக்குழு மானிய நிதியினை ஊராட்சி அளவிலான திட்டமிடல் மூலம் பயன்படுத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கண்ட பரவலாக்கப்பட்ட திட்டம் ஊராட்சி வாரியாக தயார் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட வளர்ச்சித் திட்டம் தயார் செய்வதற்குரிய பணியாளர்களுக்கு பயிற்சிகள் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட உள்ளது.

பல்வேறு துறையினர்

மேலும், அரசாணை எண் 34–ன்படி திட்டம் தயார் செய்வதில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின்கீழ் உள்ள ஊராட்சி அளவிலான களப்பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அதன்படி மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதேபோல் ஊராட்சி அளவில் அங்கன்வாடி பணியாளர், கிராம செவிலியர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ரே‌ஷன் கடை பணியாளர் ஆகியோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஊராட்சி அளவில் ஊராட்சி திட்டமிடல் குழு உறுப்பினர்கள் 6 பேர் சிறப்பு கிராம சபையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மண்டல அளவில் திட்டம் தயாரிப்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு திட்டம் தயார் செய்யப்பட உள்ளது. கிராம ஊராட்சி பகுதியில் உள்ள மக்களே அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துறை அலுவலர்களின் பங்களிப்புடன் திட்டம் தயார் செய்து அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுவே இதன் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறியள்ளார்.

பயிற்சி

முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயார் செய்தல் தொடர்பாக மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த பயிற்சியில் மகளிர் திட்ட இயக்குனர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story