எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கக் கூடாது அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்


எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கக் கூடாது அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jun 2017 12:00 AM GMT (Updated: 21 Jun 2017 7:46 PM GMT)

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

சென்னை,

தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசுக்கு சொந்தமான 12 பெரிய துறைமுகங்களில், மத்திய அரசுக்கு ஈவுத்தொகை தரும் ஒரே துறைமுகம் எண்ணூர் காமராஜர் துறைமுகம் தான். எனினும் இந்த துறைமுகத்தை அவசரம், அவசரமாக விற்பதற்கு இன்றைய அரசு ஏன் முழு முயற்சியில் இறங்கி உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது.

காமராஜரின் பெயருக்கும், புகழுக்கும் அடையாளமாக தனிச்சிறப்புடன் இயங்கி கொண்டிருக்கும் அரசுக்கு சொத்தான எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் எந்த முயற்சியையும், தமிழகம் ஒரு நாளும் ஏற்காது என்பதை மத்திய அரசும், மாநில அரசும் நினைவில் கொள்ள வேண்டும்.

இல்லையேல் அப்படிப்பட்ட துரோக செயலுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்கவேண்டும். அவர்களை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பா.ம.க.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் தொடர்ந்து லாபத்தில் இயங்கிவரும் கார்ப்பரேட் துறைமுகமான காமராஜர் துறைமுகத்தை மேம்படுத்துவதை விடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தின் மூலம் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டால் நிலக்கரி இறக்குமதிக்காக தனியார் நிறுவனங்களை தமிழகம் சார்ந்திருக்க நேரிடும்.

அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்காது. எனவே எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டுவிட்டு, சென்னை- எண்ணூர் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் இரு துறைமுகங்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

த.மா.கா.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பங்கீட்டுடன் இயக்கப்படும் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்படும் கார்களில் பெரும்பாலானவை இந்த துறைமுகத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த துறைமுகத்தின் மூலம் ரூ.480 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. எனவே மத்திய பா.ஜ.க. அரசு காமராஜர் துறைமுகத்தை படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்க எடுக்கும் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தக் கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

மேலும் லாபத்தில் இயங்கிவரும் காமராஜர் துறைமுகத்தின் பங்குகளை எக்காரணத்திற்காகவும் தனியாருக்கு விற்க முயற்சி மேற்கொள்ள கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தற்போது நிலக்கரி இறக்குமதி, இரும்புத்தாது ஏற்றுமதி, திரவ எரிவாயு இறக்குமதி, கார்கள் ஏற்றுமதி, திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி, சரக்கு பெட்டகங்கள் என பெரும் அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு வேகமாக முன்னேறி நாட்டுக்கு அதிக லாபமும் ஈட்டக் கூடிய எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சமத்துவ மக்கள் கழகம்

சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் தனது அறிக்கையில், “ சிறப்பாக இயங்கி நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

காமராஜர் துறைமுகம் ஒரு புதிய முயற்சியாக நாட்டின் முதல் கார்ப்பரேட் துறைமுகமாக அமைந்துள்ளது. எனவே அந்த துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.’ என்று கூறியுள்ளார். 

Next Story