காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வாரிய தலைவர்களின் பதவிக் காலத்தை நீடிக்க கிரண்பெடி மறுப்பு
புதுவை மாநில அரசியலில் பல்வேறு விவகாரங்களில் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு விவகாரத்திலும் இது எதிரொலித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தனவேலு (பாப்ஸ்கோ), எம்.என்.ஆர்.பாலன் (சுற்றுலா மேம்பாடு), ஜெயமூர்த்தி (புதுச்சேரி நகரமைப்புக்குழு), தீப்பாய்ந்தான் (குடிசை மாற்று வாரியம்), விஜயவேணி (சாராய வடி ஆலை), தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா (பிப்டிக்), கீதா ஆனந்தன் (மின்திறல் குழுமம்) ஆகியோருக்கு ஓராண்டு காலம் குறிப்பிடப்பட்டு வாரிய தலைவர்கள் பதவி வழங்கப்பட்டது.
இவர்களது பதவிக்காலம் கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் வாரிய தலைவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி அரசு சார்பில் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அதில் வாரிய தலைவர்களின் செயல்பாடு குறித்து விளக்கங்களை கேட்டு கவர்னர் குறிப்பு எழுதி இருந்தார். மேலும் அவர்களது பதவிக்காலத்தை நீட்டித்து அனுமதியும் வழங்கவில்லை.
இந்தநிலையில் அமைச்சரவையை கூட்டிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, வாரிய தலைவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவு செய்தார். இதுதொடர்பான கோப்புகளும் கவர்னருக்கு அனுப்பப்பட்டன.
இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் கடந்த ஆண்டு 7 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர்கள் பதவி ஓராண்டுக்கு வழங்கப்பட்டது. அப்போது வாரிய தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து 6 மாதத்தில் இடைக்கால அறிக்கை பெறப்பட்டும், அதன்பின் சம்பந்தப்பட்ட தன்னாட்சி அமைப்பின் ஆலோசனையின்பேரிலும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆனால் இதுபோன்ற எந்தவித செயல்பாட்டு குறிப்பும் (மதிப்பீடு) இல்லாமல் வாரிய தலைவர்களின் பதவி காலத்தை நீட்டிக்க கவர்னருக்கு முதல்-அமைச்சர் குறிப்பு அனுப்பி இருந்தார். அந்த செயல்பாட்டு குறிப்புகளை கேட்டு கவர்னர் அதை திருப்பி அனுப்பினார்.
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி அமைச்சரவை கூடி வாரிய தலைவர்களின் பதவி காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதிப்பீட்டு குறிப்பு இல்லாமல் வாரிய தலைவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதிக்க கோரி கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால் யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி தனக்குண்டான அதிகாரத்தின்படி ஒரு வருடம் பதவிக்காலம் முடிந்த நிலையில் 7 எம்.எல்.ஏ.க்களின் வாரிய தலைவர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யாமல் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்.
புதுவை மாநில அரசியலில் பல்வேறு விவகாரங்களில் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு விவகாரத்திலும் இது எதிரொலித்துள்ளது. இதையொட்டி வாரிய தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அரசின் முடிவுக்கு கவர்னர் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு வரும்வரை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்பினை ஏற்று செயல்படுமாறு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் புதுவையில் கவர்னருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் வாரிய தலைவர்களுக்கான பதவி காலத்தை நீட்டித்து ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுத்து இருப்பது ஆட்சியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வருங்காலத்தில் வாரிய தலைவர் பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளையும் இந்த நடவடிக்கை அதிர வைத்துள்ளது. கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக முழு அடைப்பு நடத்தியதுடன், அவருக்கு எதிரான போராட்டங்களில் கவர்னரை காங்கிரசார் ஹிட்லர் போல் சித்தரித்து படங்களை வைத்து இருந்தனர். இதுபோன்ற அவர்களது நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் கிரண்பெடியின் இந்த நடவடிக்கை அமைந்து இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story