வார்தா புயலில் சாலை ஓரங்கள், பூங்காக்களில் மரங்கள் விழுந்த இடத்தில் இருந்து மீண்டும் துளிர்விடும் மரக்கன்றுகள்


வார்தா புயலில் சாலை ஓரங்கள், பூங்காக்களில் மரங்கள் விழுந்த இடத்தில் இருந்து மீண்டும் துளிர்விடும் மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 26 July 2017 11:30 PM GMT (Updated: 26 July 2017 6:37 PM GMT)

வார்தா புயலின் போது மரங்கள் விழுந்த இடத்தில் இருந்து மீண்டும் தற்போது மரக்கன்றுகள் துளிர்விடுகின்றன. அதை பேணி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

வார்தா புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளை சூறையாடியது. இந்த புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து கீழே விழுந்ததில் பசுமை கொஞ்சம் அழிந்து போனது.

இழந்த பசுமையை மீட்டு எடுக்க தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் தங்களால் முடிந்த அளவுக்கு இந்த 3 மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வார்தா புயலின் போது சாலை ஓரங்கள், பூங்காக்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. மரங்கள் சாய்ந்து விழுந்த இடத்தில் இருந்து அதன் வேரின் மூலம் புதிய மரக்கன்றுகள் துளிர்விடுகின்றன. உதாரணமாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களில் வார்தா புயலின் போது ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன.

அதில் சில பூங்காக்களில் மரங்கள் விழுந்த இடத்தில் இருந்து மரக்கன்றுகள் துளிர்விட்டுள்ளன. மரங்கள் சாய்ந்து காய்ந்து கிடக்கும் இடத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பசுமையாக மரக்கன்றுகள் துளிர்விட்டு இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அதை அப்படியே பேணி பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்றும், புதியதாக மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பதை போல், இப்படி துளிர்விட்டு வரும் மரக்கன்றுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வார்தா புயலின் போது விழுந்த மரங்கள் இருந்த இடத்தில் தற்போது மரக்கன்றுகள் துளிர்விடுகின்றன. அதை நாங்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்து வருகிறோம். அது எங்கள் கடமை. சென்னை இழந்த பசுமையை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர்.

Next Story