கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு


கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Aug 2017 10:15 PM GMT (Updated: 8 Aug 2017 8:43 PM GMT)

கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்க ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழகத்தில் 2017–18–ம் ஆண்டில் கூட்டு பண்ணையம் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தர விட்டு உள்ளது. இந்த திட்டத்தில் 20 நபர் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். 5 விவசாய ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக் கப்பட்டு, ஒரு விவசாய உற்பத்திக்குழு ஆரம்பிக்கப்படும்.

வணிக வசதியுடன் கூடிய இந்த கூட்டு பண்ணைய முறையில், ஒருங்கிணைந்த பரப்பில் ஒரே பயிரை உற்பத்தி செய்து, நீடித்த லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலப்பு பண்ணையம், மதிப்பு கூட்டிய வேளாண்பொருட்கள் உற்பத்தி செய்தல் மற்றும் குழுவினரே தொழில் முனைவோராக தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் அடங்கிய உற்பத்தி குழுக்கள் உயரிய வேளாண்மைத்துறை தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலை பெருக்க அரசுத்துறை அலுவலர்கள் உதவுவார்கள். உற்பத்தி குழுக்கள் தொடங்கும் போது, ஒரு குழுவுக்கு தலா ரூ.5 லட்சம் இருப்பு நிதி 3 கட்டமாக பிரித்து வழங்கப்படும். இந்த குழுக்கள் கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 130 விவசாய ஆர்வலர் குழுக்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மொத்தம் 26 விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்கப் படும். அதன்படி 2 ஆயிரத்து 600 விவசாயிகள் கூட்டு பண்ணையம் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளனர். இதற்காக ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை துறையுடன் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story