வேலூர் கோட்டையும்... வரலாற்று புரட்சியும்...


வேலூர் கோட்டையும்... வரலாற்று புரட்சியும்...
x
தினத்தந்தி 15 Aug 2017 8:16 AM GMT (Updated: 15 Aug 2017 8:16 AM GMT)

சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் இந்திய வரலாற்றில் வேலூர் இடம்பெறுவதற்கு இங்கு அமைந்துள்ள கோட்டையும், அதற்குள் நடந்த சிப்பாய் புரட்சியுமே காரணம்.

வேலூரில் உள்ள கோட்டை விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்க மன்னரான குச்சிபொம்மு நாயக்கரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள கோட்டை, மதில்கள், அகழி ஆகியவை உறுதியான கல் கட்டிடத்திற்கு பெயர் பெற்றது.

133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டைக்குள் செல்லவும், வெளியே வரவும் ஒரே ஒரு நுழைவுவாயில்தான் உள்ளது.
எதிரிகள் எளிதில் கோட்டைக்குள் செல்லமுடியாத வகையில் கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலத்திலும், 29 அடி ஆழத்திலும் அகழி அமைக்கப்பட்டுள்ளது.

நாயக்கர்களிடமிருந்து பிஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், அதைத்தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் கைமாறிய இந்த கோட்டை, கடைசியாக ஆங்கிலேயர்களுக்கு கைமாறி 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் அவர் வசமே இருந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில், திப்புசுல்தான் குடும்பத்தினர் இந்த கோட்டையில்தான் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை கண்டி அரசின் கடைசி மன்னரான விக்கிரமசிங்கராஜனும் இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தார். விஜயநகரத்து பேரரசன் ஸ்ரீரங்கராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதும் இந்த கோட்டைக்குள்தான்.

இப்படி பல வகையிலும் வரலாற்று சிறப்பு பெற்ற இந்த கோட்டைக்குள்தான் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சியும் நடந்தது.
1805-ல் வேலூர் கோட்டையில் இருந்த ‘மெட்ராஸ் ரெஜிமெண்டை’ சேர்ந்த தென்னிந்திய படைகள் கலகத்தில் ஈடுபட்டனர்.

அந்த வருடம் ஆங்கிலேய ராணுவ அதிகாரி, இந்திய படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களை அணியக்கூடாது, காதில் தோடு போடக்கூடாது என்றும் ஐரோப்பிய ராணுவ உடைகளைத்தான் அணியவேண்டும் என்றும் ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய்வடிவ தொப்பியை அணியவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் இருந்த 1,500 இந்து, முஸ்லிம் வீரர்கள் கொதித்தெழுந்தனர். இதனால் அவர்களின் தலைவர் களுக்கு 600 பிரம்படி கொடுக்கப்பட்டது. இது வீரர்களை மேலும் கோபத்தை தூண்டி புரட்சியில் ஈடுபட வைத்தது.

10-7-1806 அன்று அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களுடைய படுக்கை யிலேயே கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை கொன்றனர்.

இதைத்தொடர்ந்து ஆற்காட்டிலிருந்து 19-ம் சிறிய குதிரைப்படை விரைந்து வந்து, 2 நாட்களில் வேலூர் கோட்டையை கைப்பற்றியது.
அப்போது நடந்த சண்டையில் 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். மற்ற வீரர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பீரங்கி முனையில் கட்டப்பட்டு, பீரங்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி கோட்டைக்குள் நடந்த இந்த சம்பவமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முதல் போராக கருதப்படும் சிப்பாய் கலகமாகும். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் வித்திட்டது.
இதன் நினைவாக வேலூர் வடக்குபோலீஸ் நிலையம் அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 10-ந் தேதி இந்த நினைவுத்தூண் அலங்கரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

Next Story