பள்ளிக்கரணையில் வீட்டில் பதுக்கிய 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது


பள்ளிக்கரணையில் வீட்டில் பதுக்கிய 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 5:00 PM GMT)

பள்ளிக்கரணையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ ‘மாவா’ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘மாவா’ போதைப்பொருட்களை சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதிகளில் தயாரித்து புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் பள்ளிக் கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பள்ளிக்கரணை பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காமாட்சியம்மன் நகர் 1-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் ‘மாவா’ போதைப்பொருட்கள் தயாரித்து, கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 100 கிலோ ‘மாவா’ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ‘மாவா’ தயாரிக்க பயன்படுத்திய 3 கிரைண்டர், 1 மிக்சி ஆகியவற்றையும் கைப்பற்றினார்கள்.

மேலும் அந்த வீட்டில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
வீட்டிலேயே ‘மாவா’ போதைப்பொருட்கள் தயாரித்து புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்று வந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story