திருத்தணி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்


திருத்தணி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Aug 2017 10:45 PM GMT (Updated: 30 Aug 2017 9:14 PM GMT)

திருத்தணி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கார் டிரைவரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் காலனியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்(வயது 55), சுதாகரன் (47). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு சென்று விட்டு மீண்டும் நல்லாட்டூர்காலனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் மணிகண்டன், சுதாகரன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டம்

விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்யக்கோரி மணிகண்டன், சுதாகரனின் உறவினர்கள், கிராம மக்கள் நல்லாட்டூர் காலனி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story