கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு இன்று வந்தடையும்


கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு இன்று வந்தடையும்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-21T02:48:32+05:30)

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அங்கிருந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை வந்து சேர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலைவனம்போல் காட்சி அளித்த ஒகேனக்கல் அருவி பகுதிகளில் தற்போது தண்ணீர் பாய்ந்து விழுகிறது.

ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் தண்ணீர் வந்ததன் காரணமாக ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று மாலை 6,500 கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பியது. அந்த அணையில் இருந்து 11 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இன்று (வியாழக்கிழமை) மாலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story