மக்கும் தன்மையுடைய மாற்று பைகள் தயாரிக்க திட்டம் அமைச்சர் கந்தசாமி தகவல்


மக்கும் தன்மையுடைய மாற்று பைகள் தயாரிக்க திட்டம் அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-21T03:13:08+05:30)

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மக்கும் தன்மையுடைய மாற்று பைகளை தயாரிக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், விஜயவேணி, உள்ளாட்சித்துறை இயக்குனர் முகமது மன்சூர், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் துவாரகநாத், புதுவை நகராட்சி ஆணையர் கணேசன் மற்றும் உள்ளாட்சி, அறிவியல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

மளிகை கடைகள், காய்கறி கடைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பேக்கேஜிங் பொருட்கள் அல்லது சிறிய உறைகள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இது புதுவை அரசு அறிவிப்புக்கு எதிரானது. எனவே 50 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பேக்கிஜிங் பொருட்கள் அல்லது சிறிய உறைகள் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி அரசு 51 மைக்ரான் தடிமனுக்கு கீழே பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள், மொத்த வர்த்தகர்கள் மற்றும் விற்பனையாளர்களிடையே பெரிய அளவில் காணப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்கிறார்கள். புதுவை அரசு அறிவித்தபடி 51 மைக்ரான் தடிமனுக்கு கீழே பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவோ விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது.

காகிதம் அல்லது பிளாஸ்டிக் தாள்களில் பிரியாணி மற்றும் சமைக்கப்பட்ட சாதங்களை கட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்த உணவுகள் சூடான நிலையில் இருப்பதால் நுகர்வோர் நலன் கெடுகிறது. எனவே அனைத்து சிறிய ஓட்டல்கள், உணவகங்கள், விற்பனையாளர்கள் இத்தகைய பேக்கேஜிங் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வப்போது உணவு ஆய்வாளர்கள் மற்றும் ஆணையர்கள் திடீர் சோதனைகள் செய்து சட்டத்தை மீறுவோரை தண்டிக்க வேண்டும்.

மாற்றாக வாழை இல்லை அல்லது இயற்கையான இலைகளை பயன்படுத்துமாறு கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாப்பிடும் உணவு பொருட்களை கட்டுவதற்கு இயற்கையான இலைகளை பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மக்கும் தன்மையுடைய மாற்று பைகளை கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் 6 மாதத்தில் இது அமலுக்கு வரும். இந்த பைகளை தனியார் சுய உதவி குழுக்களை கொண்டு தயாரிக்கவும், அவர்களுக்கு மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.


Next Story