மாணவர்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் கேசவன் அறிவுரை


மாணவர்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் கேசவன் அறிவுரை
x
தினத்தந்தி 20 Sep 2017 9:54 PM GMT (Updated: 20 Sep 2017 9:54 PM GMT)

பல துறைகளில் தனித்திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.

காரைக்கால்,

காரைக்காலை சேர்ந்த சேத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கேசவன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள மத்திய சமையல் கூடத்தை ஆய்வு செய்த கலெக்டர், சமையல் செய்யும் பாத்திரங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும், சமைத்த உணவை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டும் என்று சமையல் கூட பொறுப்பாளர் மற்றும் பணியாளர் களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர், பாடம் சம்பந்தமான கேள்விகளை கேட்டு அதற்கு அவர்கள் சரியாக பதிலளிக்கிறார்களா? என்று சோதித்தார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் கலெக்டர் பேசுகையில், ‘பள்ளி நேரத்திற்கு முன்பாகவே மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து விடவேண்டும். ஒழுக்கம் நிறைந்தவர்களாக வளர வேண்டும். வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். கல்வி மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் தனித்திறனை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ என்றார்.
ஆய்வின்போது மாவட்ட கூடுதல் கலெக்டர் மங்களாட் தினேஷ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Next Story