புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு


புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2017 5:45 AM IST (Updated: 12 Oct 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி,

கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், அரசு தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலர்கள் கந்தவேலு, மிகிர்வர்தன், சுந்தரவடிவேலு, மணிகண்டன் வணிக வரித்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி அரசு ஊழியர் களுக்கு போனஸ் வழங்குவது சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. அரசிதழில் பதிவு பெறாத குரூப் ‘சி’, குரூப் ‘பி’ ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

அரசு பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களை பொறுத்தவரையில் சில நிறுவனங்கள் லாபத்திலும், பல நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு விவாதங்களுக்கு பிறகு ரூ.11 ஆயிரம் போனஸ் வழங்குவது என்றும், தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1,200 கருணை தொகை வழங்குவது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பொதுத்துறை, கூட்டுறவு அமைப்புகள் தவிர, நஷ்டத்தில் இயங்கும் அமைப்புகள் இலாகா பொறுப்பாளர்கள் கோப்புகள் மிக விரைவில் அதற்கு ஒப்புதல் பெற முடிவு எடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தாகூர் கலைக்கல்லூரியை தாகூர் கலைக்கல்லூரி மற்றும் விஞ்ஞான கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

காலாப்பட்டு பகுதியில் மின்னணு பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு நிறுவனத்திற்கு ஏற்கனவே நாம் இடத்தை வழங்கி உள்ளோம். சுமார் 60 கோடி ரூபாயில் மின்னணு ஆராய்ச்சி மையம் அங்கு அமைக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு சார்பில் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் 35 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story