நவம்பர் 2-ந்தேதி பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்


நவம்பர் 2-ந்தேதி பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 11 Oct 2017 11:30 PM GMT (Updated: 11 Oct 2017 9:59 PM GMT)

சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூருவில் நவம்பர் 2-ந் தேதி பா.ஜனதா தேர்தல் பிரசாரம் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இழந்த ஆட்சியை எப்படியும் கைப்பற்றியே தீர வேண்டும் என்று பா.ஜனதா தீவிரமாக செயலாற்றி வருகிறது.

நாட்டில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ், கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் ராகுல் காந்தி தனி கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் அரசின் சாதனைகளை வீடு,வீடாக தெரியப்படுத்தும் நிகழ்ச்சியை அந்த கட்சி செய்து வருகிறது. சொந்த பலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா கூறி வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் ‘நவ கர்நாடகத்தை உருவாக்க பரிவர்த்தனா யாத்திரை‘ என்ற பெயரில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார கூட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார் கள்.

அதைத்தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களை நடத்த பா.ஜனதா முடிவு செய்து உள்ளது.


Next Story