குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்
சென்னையை அடுத்த பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம்(வயது 53).
தாம்பரம்,
இவரது குடியிருப்பு வளாகத்தில் 5–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இவர்களின் மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 4 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாராவது பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி விழுந்து வாகனங்களில் தீப்பிடித்ததா? அல்லது யாராவது வேண்டுமென்றே வாகனங்களுக்கு தீ வைத்தனரா? அல்லது அருகில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.