உயிலாக ஏற்கப்பட்ட இறந்தவரின் ‘எஸ்.எம்.எஸ்.’
இறந்தவரின் செல்போனில் இருந்த குறுந்தகவலை அவரது அதிகாரப்பூர்வ உயிலாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இறந்த ஒருவரின் செல்போனில் இருந்த அனுப்பப்படாத குறுந்தகவலை அவரது அதிகாரப்பூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இறந்த அந்த 55 வயது நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுந்தகவலை டைப் செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்போன் எண்ணை பெறுநருக் கான இடத்தில் நிரப்பியிருக்கிறார்.
ஆனால், அந்தச் செய்தியை அனுப்பாமல் தன் செல்போனில் சேமித்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டபின் அந்தச் செய்தி அவரது செல்போனில் இருப்பது தெரியவந்தது.
அந்தச் செய்தியில் இருக்கும் சொற்கள் மூலம், அது ஓர் உயிலாகச் செயல்பட வேண்டும் எனும் நோக்கிலேயே இறந்த நபரால் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது என்று பிரிஸ்பேன் சுப்ரீம் கோர்ட்டு தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
அந்தக் குறுந்தகவலில் தன் வங்கிக் கணக்கின் விவரங்களையும், வீட்டில் தான் பணத்தை மறைத்து வைத்துள்ள இடங்களைப் பற்றியும் அவர் தெரிவித்திருக்கிறார்.
‘‘என்னை எரித்த சாம்பலை வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் தூவவும். டி.வி. பெட்டியின் பின்புறம் கொஞ்சம் பணம் உள்ளது. வங்கியிலும் கொஞ்சம் பணம் உள்ளது’’ என்று அவர் பதிவு செய்திருந்தார்.
ஆனால் அந்தச் செய்தியைத் தன் கணவர் அவரது சகோதரருக்கு அனுப்பாததால் அது செல்லாது என்று கூறி, அவரின் சொத்துகளை தான் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று இறந்த நபரின் மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பொதுவாக ஓர் உயில் செல்லுபடியாக வேண்டும் என்றால், அது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அதோடு அதற்கு இரண்டு சாட்சியாளர்கள் கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த 2006–ம் ஆண்டு குயின்ஸ்லாந்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், குறைவாக முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் உயிலாகக் கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.
‘‘ஆக, இது எனது உயில்’’ என்று அந்த நபர் தன் ‘எஸ்.எம்.எஸ்.’–ஐ முடித்துள்ளதால் அதை உயிலாகக் கருதலாம் என்று நீதிபதி சூசன் பிரவுன் கூறிவிட்டார்.
‘என் உயில்’ என்று எழுதப்பட்டிருந்த டி.வி.டி. ஒன்று ஆஸ்திரேலியாவில் கடந்த 2013–ம் ஆண்டு உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story