திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி– வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்


திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி– வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்
x
தினத்தந்தி 21 Oct 2017 9:00 PM GMT (Updated: 21 Oct 2017 2:30 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 2–ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா‘, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோ‌ஷங்களை விண்ணதிர எழுப்பியவாறு, சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளல்

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

6–ம் திருநாளான வருகிற 25–ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story