பட்டதாரி பெண்களுக்கு அரசு திருமண உதவித்தொகை வழங்கியதில் குளறுபடி சமூக நலத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பட்டதாரி பெண்களுக்கு அரசு திருமண உதவித்தொகை வழங்கியதில் குளறுபடி சமூக நலத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 7:42 PM GMT)

பட்டதாரி பெண்களுக்கு அரசு திருமண உதவித்தொகை வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டதால் சத்தியமங்கலம் சமூக நலத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டதாரி பெண்களுக்கான அரசு திருமண உதவித்தொகை பெற விண்ணப்பித்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பகல் 11.30 மணி அளவில் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர், ‘திருமண உதவித்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவு வந்து உள்ளது,’ என்று கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பட்டதாரி பெண்களுக்கான அரசின் திருமண உதவித்தொகையாக ஒரு பவுன் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. நாங்கள் பட்டதாரி பெண்களுக்கான திருமண உதவித்தொகை பெற தான் விண்ணப்பித்திருந்தோம். அப்படி இருக்கையில் எங்களுக்கு எவ்வாறு ஒரு பவுன் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவு வந்து உள்ளது,’ என்று அங்கிருந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி சமூக நலத்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், ‘பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ஒரு பவுன் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. உங்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 2016–ம் ஆண்டு ஈரோடு சமூக நலத்துறைக்கு அனுப்பப்பட்டது. இங்கிருந்து அனுப்பியபோது கணினியில் பட்டப்படிப்பை பதிவு செய்ததில் தவறு நடந்து விட்டது. இதுதான் குளறுபடிக்கு காரணம். இதுகுறித்து ஈரோடு சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

எனவே திருமண உதவித்தொகை பெற இங்கு வந்து உள்ள அனைவரும் மீண்டும் ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்து, அதனுடன் பட்டப்படிப்பு படித்ததற்கான சான்றிதழ்களையும் இணைத்து கொடுங்கள். விரைவில் பட்டதாரி பெண்களுக்கான திருமண உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்,’ என்றார்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை மதியம் 12.30 மணி அளவில் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து பட்டதாரி பெண்களுக்கான திருமண உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமூக நலத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் ஒப்படைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் சமூக நலத்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story