சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2017 2:30 AM IST (Updated: 13 Nov 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்கமகளூரு,

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தொழிலாளி

சிக்மகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் அருகே குல்லன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 21). தொழிலாளி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவளுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமி, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், அந்த சிறுமியை மறித்து நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.

மேலும் அந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பள்ளியில் கொண்டு விடுவதாக கூறியதாக தெரிகிறது. இதை உண்மை என நம்பி அந்த சிறுமியும், அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளாள்.

பாலியல் பலாத்காரம்

ஆனால் அவர், சிறுமியை பள்ளியில் கொண்டுவிடாமல், சிக்கமகளூரு அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை கண்ணன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலை வீடு திரும்பிய சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

இதனால் அந்த சிறுமியை அவளது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

10 ஆண்டு சிறை

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அவளிடம் விசாரித்து உள்ளனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பசவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் போலீசார் கண்ணன் மீது சிக்கமகளூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த சம்பவம் கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி நடந்தது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிக்கமகளூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி கெம்பேகவுடா தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கண்ணனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story