கோவூர் அருகே ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின


கோவூர் அருகே ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின
x
தினத்தந்தி 29 Nov 2017 9:45 PM GMT (Updated: 2017-11-30T02:05:37+05:30)

கோவூர் அருகே ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின.

பூந்தமல்லி,

தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் கோவூர் அருகே நேற்று முன்தினம் இரவு ஜீப் ஒன்று பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது தாம்பரத்தில் இருந்து பொன்னேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பிரபு (வயது 32), என்பவர் சாலையோரத்தில் ஜீப் பழுதாகி நின்று கொண்டிருப்பது தெரியாமல் அதன் பின்னால் மோதி விட்டார். இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது மட்டும் மல்லாமல் பிரபுவுக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கீழே இறங்கி வந்த பிரபுவுக்கும் அந்த ஜீப்பின் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரபு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜீப் டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து காயம் அடைந்த பிரபுவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த ஜீப்பை சோதனை செய்தனர்.

அப்போது ஜீப்பின் மேல் பகுதியில் சிமெண்டு மூட்டைகளும் அதற்கு கீழ் பகுதியில் செம்மரக்கட்டைகளும் இருப்பது தெரியவந்தது. இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் அங்கு வந்த போலீசார், அந்த ஜீப் மற்றும் செம்மரக்கட்டைகளை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அதில் சுமார் 6 அடி முதல் 10 அடி நீளம் கொண்ட 12 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த ஜீப் நம்பர் பிளேட்டில் பார்த்தபோது மேல் பகுதியில் போலியான நம்பர் பிளேட்டும் அதனை எடுத்து பார்த்தபோது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் இருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த ஜீப் யாருடையது. தப்பி ஓடிய டிரைவர் யார்? செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்தும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story