ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை கலெக்டர் வழங்கினார்


ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Dec 2017 11:00 PM GMT (Updated: 11 Dec 2017 9:47 PM GMT)

ஒகி புயலில் சிக்கி உயிர் இழந்த தூத்துக்குடி மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் சார்லஸ் மகன் ரவீந்திரன், வின்சென்ட் மகன் ஜூடு, ஜூடு மகன் மரியபாரத் பெனில்ஜூடு, சோரீஸ்பிள்ளை மகன் ஜோசப், தொபியாஸ் மகன் கெனிஸ்டன், சேசையா மகன் ஜெகன் ஆகியோர் குளச்சல் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஒகி புயலில் சிக்கி கடலில் தத்தளித்தனர். இதில் ஜெகன் மட்டும் மீட்கப்பட்டார். மற்ற 5 மீனவர்களில் இறந்த ஜூடு உடல் விழிஞ்சம் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், மரபணு பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஒகி புயலில் சிக்கி இறந்த மீனவர் ஜூடு குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் காப்பீடு உதவித்தொகை ரூ.2 லட்சம் உள்பட ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வெங்கடேஷ், ஜூடுவின் மனைவி சுதாவிடம் நேற்று காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பிரசாந்த், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் பாலசரசுவதி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறும் போது, ‘ஒகி புயலில் சிக்கிய தூத்துக்குடி மீனவர்கள் 5 பேரில், ஜூடு உடல் மீட்கப்பட்டு உள்ளது. இவருடைய குடும்பத்துக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும், மற்ற 4 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார். 

Next Story