அரசு ஊழியர்களுக்கு வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் நாராயணசாமி உறுதி


அரசு ஊழியர்களுக்கு வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 13 Dec 2017 11:30 PM GMT (Updated: 2017-12-14T02:07:17+05:30)

புதுவை அரசு ஊழியர்களுக்கு வழக்கம்போல் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு நிதி தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தபின் மாநில வருவாய் மாதம் ஒன்றுக்கு ரூ.40 கோடி வரை குறைந்துவிட்டதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதால் மாநில அரசுக்கு தற்போது கூடுதலாக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதால் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமையை மத்திய அரசு மானியமாக தரவேண்டும், திட்டமில்லா செலவினங்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தர வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை கூடுதல் நிதி வழங்கவில்லை.

இந்தநிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி குறிப்பிட்டிருந்தார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:–

தமிழக அரசுக்கு ரூ.2½ லட்சம் கோடி கடன் உள்ளது. உத்தரபிரதேச அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளது. இதேபோல் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடன்கள் உள்ளன. இதேபோல்தான் புதுவை அரசுக்கும் கடன் உள்ளது. இதற்கான வட்டியை செலுத்தி வருகிறோம். அரசு நிர்வாக தேவைக்காக வெளி மார்க்கெட்டின் கடன் பெறுகிறோம்.

இப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கு வட்டியுடன் சேர்த்து அசலையும் செலுத்த வேண்டியுள்ளது. சரக்கு சேவை வரி அமல்படுத்தியபின் மாநில வருவாயில் நிலையற்றதன்மை நிலவுகிறது.

6–வது சம்பளக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிலுவைத்தொகை ரூ.120 கோடியை மத்திய அரசு புதுவை அரசுக்கு தரவேண்டியுள்ளது. அதேபோல் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிலுவைத்தொகை ரூ.550 கோடியும் தரவேண்டியுள்ளது. இதுமட்டுமின்றி திட்டமில்லா செலவினத்துக்கான பாக்கியாக மத்திய அரசிடம் இருந்து ரூ.1,650 கோடி வரவேண்டியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி மந்திரியை 20 முறை சந்தித்து பேசியுள்ளேன். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டியது அரசின் தலையாய கடமை. வழக்கம்போல் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் புதுவை அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story