உணவு பொருட்கள் தயாரிப்பு, விற்பனை செய்யும் வணிகர்கள் உரிமம் பெற்று பதிவு செய்யாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை


உணவு பொருட்கள் தயாரிப்பு, விற்பனை செய்யும் வணிகர்கள் உரிமம் பெற்று பதிவு செய்யாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2017 10:45 PM GMT (Updated: 29 Dec 2017 6:18 PM GMT)

உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் வணிகர்கள் உரிமம் பெற்று பதிவு செய்யாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறை சார்பில் உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் அனைத்து வணிகர்களுக்கும் உரிமம் பதிவு பெறுவதற்கு சிறப்பு முகாம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

அதை தொடர்ந்து வணிகர்கள் உரிமம் பெற்று பதிவு செய்து கொண்டனர். இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சேதுபதி, ரவீந்திரன், சிறு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சக்திவேல், செந்தில் முருகன், உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் கோவிந்தராஜ், சுப்புராஜ், செல்வபாண்டி, செந்தில்குமார், அருள்ராஜ், காளிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறியதாவது:–

உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் அனைத்து வணிகர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு கீழ் வணிகம் செய்பவர்கள் ரூ.100, ரூ.12 லட்சத்திற்கு மேல் வணிகம் செய்பவர்கள் ரூ.2 ஆயிரம், பெரிய நிறுவனங்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். இதற்கு ஆன்–லைனில் விண்ணபித்துக்கொள்ளலாம்.

இதற்கான சிறப்பு முகாமில் 507 பேர் கலந்துகொண்டு உணவு விற்பனை மற்றும் தயாரிப்புக்கு உரிமம் பெற்று பதிவு செய்து கொண்டனர். இதற்கு முன் 650 பேர் பதிவு செய்து இருந்தனர். தற்போது 20 சதவீத பேர் தான் உரிமம் பெற்று பதிவு செய்துள்ளனர். நாளைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) உரிமம் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story