அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Dec 2017 10:00 PM GMT (Updated: 31 Dec 2017 8:24 PM GMT)

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா பல்வேறு தடைகளை கடந்து சென்ற ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர்,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா பல்வேறு தடைகளை கடந்து சென்ற ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும் பாலமேட்டில் 15–ந்தேதியும், அலங்காநல்லூரில் 16–ந்தேதியும் ஜல்லிக்கட்டு விழா வழக்கம் போல நடைபெற உள்ளது.

இதற்காக நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஜல்லிகட்டு நடைபெற உள்ள வாடிவாசல் பகுதிகள், காளைகள் பரிசோதனை செய்யும் இடம், காளைகள் சேகரிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கால் நடைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இரண்டு அடுக்கு தடுப்பு பாதுகாப்பு வேலி அமைப்பது குறித்தும் அதனை எந்தெந்த பகுதிகளில் அமைப்பது என்றும் அதற்கான வரைபடத்தை பார்த்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜூலான்பானு, பூங்கொடி முருகு, வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன், கால்நடை மருத்துவர் ராஜா உள்பட ஜல்லிகட்டு விழாகமிட்டியினர் கலந்து கொண்டனர்.

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்காக ஜல்லிகட்டு கமிட்டியாளர்கள் ஜல்லிகட்டு விழாவிற்கான அழைப்பிதழ்களை சில தினங்களாக கொடுத்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் முதல் அருகில் உள்ள கிராமங்களில் காளை வளர்ப்பவர்கள் வரை இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

மேலம் ஜல்லிக்கட்டிற்காக காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


Next Story