கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு


கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2018 4:30 AM IST (Updated: 1 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நாளை பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நேற்று ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடந்தது. இதில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமொழியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், தமிழர் தேசிய பேரியக்க நிர்வாகிகள் ராசுமுனியாண்டி, பழ.ராஜேந்திரன், பெரியகோவில் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை (செவ்வாய்க் கிழமை) அவர் சுற்றுலா மாளிகையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் மனுக்களை பெறுகிறார். அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கக்கூடாது. கவர்னர் இதுவரை உருப்படியாக தமிழகத்திற்கு எதையும் செய்தது இல்லை.

அரசு அளித்த வாக்குறுதியை நம்பி தண்ணீர் வரும் என விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் இல்லை. பயிர்கள் கருகுகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்காத கவர்னர், மனுக்கள் வாங்குவது நாடகம் ஆடுவது ஆகும். அவருக்கு தமிழகம் மீது அக்கறை இருக்குமானால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக கவர்னருடன் பேசி காவிரி நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்து விட்டு அவர் மனுக்கள் வாங்கலாம். இவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தஞ்சையில் நாளை மதியம் மனுக்கள் வாங்கும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா மாளிகை அருகே கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும்.

திரைப்படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த் அரசியலில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களிலும் நடிகர்கள் அரசியலுக்கு வர போட்டி போடுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர போட்டி போட்டு கட்சி தொடங்குவதாக கூறுகிறார்கள். ரஜினிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story