மொடக்குறிச்சி அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி பலி


மொடக்குறிச்சி அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி பலி
x
தினத்தந்தி 2 Jan 2018 3:00 AM IST (Updated: 2 Jan 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி பரிதாபமாக இறந்தார்.

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கோகத்தான்வலசுவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 54). விவசாயி. அவருடைய மனைவி செல்வி (43). இவர்களுக்கு சதீஷ்குமார் (20), பிரசாந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளார்கள். இதில் சதீஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரசாந்த் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

ஜெகதீசனுக்கு கடந்த மாதம் 25–ந் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சிவகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் 27–ந் தேதி அவர் மீண்டும் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஜெகதீசனுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜெகதீசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story