ஈரோடு மாவட்டத்தில் ஏலம் எடுக்கப்படாத 71 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன
ஈரோடு மாவட்டத்தில் ஏலம் எடுக்கப்படாத 71 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 175 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 76 கடைகளில் பார்கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களுக்கான ஏலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால் மறு ஏலம் அறிவிக்காததால் ஒவ்வொரு மாதமும் முந்தைய ஏலத்தொகையை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் டாஸ்மாக் பார்கள் ஏலம் விடுவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் பார்கள் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையில் 3 சதவீதத்தை தொடக்க ஏலத்தொகையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தொகை அதிகமாக இருப்பதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள் ஏலம் எடுக்கவும் முன்வரவில்லை. அதன்பின்னர் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், டிசம்பர் மாதம் 31–ந் தேதி வரை பார்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பார்களுக்கான ஏலம் நடத்தப்பட்டது. இதில் 5 டாஸ்மாக் பார்கள் மட்டுமே ஏலம் போனது. மற்ற பார்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதனால் நேற்று முதல் ஏலம் எடுக்கப்படாத 71 டாஸ்மாக் பார்களும் மூடப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஏலத்தில் 5 டாஸ்மாக் பார்கள் ஏலம் போனது. எனவே சத்தியமங்கலத்தில் உள்ள 2 கடைகளிலும், மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு கடையிலும் என மொத்தம் 5 டாஸ்மாக் கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற 71 பார்களும் மூடப்பட்டு விட்டன. ஏலம் விடுவது தொடர்பாக தமிழக அரசு மறு அறிவிப்பை வெளியிட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்றார்.
டாஸ்மாக் கடைகளில் பார்கள் மூடப்பட்டதால் குடிமகன்கள் மதுவை வாங்கிவிட்டு பொது இடங்களில் அமர்ந்து குடித்தனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும், குடிமகன்கள் ஒதுக்குப்புறங்களில் மது அருந்திவிட்டு ஆங்காங்கே காலிப்பாட்டில்களை வீசிச்சென்றனர்.