கிரேன் விழுந்து 3 தொழிலாளிகள் பலி
மும்பை பவாயில் கிரேன் இடிந்து விழுந்து 3 தொழிலாளிகள் பலியானார்கள். 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை,
மும்பை பவாய் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நேற்று மாலை 7.20 மணியளவில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக குழிதோண்டும் பணியில், சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிரேன் ஒன்று திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில், 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும், இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்சில் ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான 3 பேரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிரேன் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.