விதிமுறை மீறிய 12,215 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை
புத்தாண்டு தினத்தன்று விதிமுறை மீறிய 12 ஆயிரத்து 215 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மும்பை,
மும்பையில் புத்தாண்டையொட்டி நேற்றுமுன்தினம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கேட்வே ஆப் இந்தியா, கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த இடங்களில் குட்டி விமானங்களை பயன்படுத்தி போலீசார் கண்காணித்து வந்தனர்.
இதேபோல குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் மும்பை முழுவதும் நேற்றுமுன்தினம் மாலை முதல் நேற்று காலை 6 மணி வரை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய 7 ஆயிரத்து 600 பேருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் சிக்னலை மீறுதல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லுதல் என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆயிரம் பேர் போலீசாரிடம் சிக்கினர்.
இதுதவிர குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 615 பேரை போலீசார் பிடித்தனர். மொத்தமாக பிடிபட்ட 12 ஆயிரத்து 215 பேரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது.
இந்த தகவலை மும்பை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அமிதேஷ்குமார் தெரிவித்தார்.