கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் 3 பேர் கைது தலைமறைவாக இருந்தவர்கள்


கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் 3 பேர் கைது தலைமறைவாக இருந்தவர்கள்
x
தினத்தந்தி 12 Jan 2018 5:30 AM IST (Updated: 12 Jan 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து சம்பவத்தில், தேடப்பட்டு வந்த கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை கமலா மில் வளாகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் செயல்பட்டு வந்த ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ ஆகிய 2 கேளிக்கை விடுதிகளில் கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர தீ விபத்தின் போது, அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்த இளம்பெண் உள்பட 14 பேர் புகையில் சிக்கி மூச்சு திணறி பலியானார்கள். மேலும் பலர் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தீ விபத்து தொடர்பாக மும்பை மாநகராட்சி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் ஹிருபேஷ் சங்க்வி, ஜிகர் சங்க்வி, அபிஜித் மான்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை தேடப்படும் நபர்களாக போலீசார் அறிவித்தனர்.

அவர்கள் இருக்கும் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் மும்பை போலீஸ் அறிவித்து இருந்தது. இதற்கிடையே போலீசார் தீ விபத்து ஏற்பட்ட ‘ஒன் அபோவ்’ கேளிக்கை விடுதியின் மேலாளர்களான கெவின் பாவா(வயது35), லிஸ்பான் லோபேஷ்(34) மற்றும் கேளிக்கை விடுதி உரிமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவர்களது உறவினர்கள் இருவர் கைதானார்கள்.

‘மோஜோ பிரிஸ்டோ’ கேளிக்கை விடுதியில் ஹூக்கா புகைத்தபோது, பறந்த தீப்பொறி தான் தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்ததாக தீயணைப்பு துறை தெரிவித்தது. இதையடுத்து, அந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளரான முன்னாள் டி.ஜி.பி. கே.கே.பதக்கின் மகன் யுக் பதக் மற்றும் பங்குதாரர் யுக் துல்லி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் யுக் பதக் புனேயில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், தலைமறைவாக உள்ள ‘ஒன் அபோவ்’ கேளிக்கை விடுதியின் உரிமையாளர்களான ஹிருபேஷ் சிங்க்வி, ஜிகர் சிங்க்வி ஆகியோர் பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மெரின் டிரைவில் பதுங்கி இருந்த அபிஜித் மான்கரும் கைதானார். பின்னர் 3 பேரும் நேற்று போய்வாடா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 17-ந்தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story