தமிழக அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது
தமிழக அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பாகூர் வழித்தடத்தில் இயங்கிய பஸ்சின் பின்புறத்தில் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
பாகூர்,
தமிழக அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 8–வது நாளாக நீடித்தது. இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் புதுவையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் இருந்து கடலூர், காரைக்கால், சென்னை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்களே இயக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடந்த ஒருவாரமாக புதுவையில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று காலை பாகூர் பஸ் நிறுத்தத்தில் கடலூருக்கு செல்வதற்காக பஸ்சை எதிர்பார்த்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கரிக்கலாம்பாக்கம், பாகூர் வழியாக கடலூருக்கு இயக்கப்படும் தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்தது.
வேறுவழியின்றி அங்கு பஸ் நிறுத்தத்தில் நின்றவர்களும் அந்த பஸ்சில் ஏறினார்கள். பஸ்சுக்குள் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்ததால் வேறு வழியில்லாமல் கல்லூரி மாணவர்கள், ஒரு சில வாலிபர்கள் பஸ்சின் படிக்கட்டுகளிலும், பின்புறத்தில் உள்ள ஏணியிலும் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.