வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா


வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா
x
தினத்தந்தி 16 Jan 2018 4:00 AM IST (Updated: 16 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி,

சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் சுற்றுலா கலைவிழா வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தானில் நடந்தது. விழாவிற்கு அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 330 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேட்டு நீரேத்தான் துர்க்கை அம்மன் கோவிலிலிருந்து அவர்களை பாரம்பரியமுறைப்படி தாரைதப்பட்டையுடன் பூரணகும்ப மரியாதையுடன் மாவட்டசுற்றுலாத்துறைஅலுவலர் பாலமுருகன் தலைமையில் பொதுமக்கள் வரவேற்றனர்.

அதன்பின் மந்தைதிடலில் உள்ள கலையரங்கிலும் மந்தைகளத்திலும் கிராமிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், கட்டகால்ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட ஆட்டங்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன் அவர்களும் ஆடி மகிழ்ந்தனர்.

அதன்பின் கிராமபொதுமக்கள் பொங்கல்வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினர். அதை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல்விழா பற்றியும் கொண்டாடும்விதம் பற்றியும் விளக்கப்பட்டது.

இதில் உதவிசுற்றுலாஅலுவலர் அன்பரசு, சுற்றுலா சங்க தலைவர் செந்தில் நாதன், தானம் அறக்கட்டளை சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் பி.கே.பாரதி, லயன்ஸ் சங்கதலைவர் பொன்னையா, செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் இளங்கோவன், பொங்கல்விழா மாவட்ட தலைவர் சிவக்குமார், வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பழங்கால நாணயங்கள் கண்காட்சியும் நடந்தது.

கொட்டாம்பட்டி அருகே உள்ள பாண்டாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊருக்கு வந்து பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 12- வது ஆண்டாக தற்போதும் அங்கு வந்து கிராமத்தினரோடு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். 

Next Story