கார் மோதி பெண் பலி உறவினர்கள் திடீர் சாலைமறியல்


கார் மோதி பெண் பலி உறவினர்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 16 Jan 2018 4:15 AM IST (Updated: 16 Jan 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே கார் மோதி பெண் ஒருவர் பலியானார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோகனூர்,

மோகனூர் அருகே உள்ள அணியாபுரம் காலனியை சேர்ந்தவர் அப்பாவு. இவருடைய மனைவி கமலாயி (வயது 50). இவர் நேற்று முன்தினம் மாலை அணியாபுரத்தில் இருந்து தோளூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே கார் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இறந்த கமலாயியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் இறந்த கமலாயியின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கூறி, அவரின் உடலை எடுக்க விடாமல் தடுத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்-மோகனூர் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்பிறகு கமலாயியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிரைவரை தேடி வருகிறார்கள். மேலும் இந்த விபத்தையொட்டி மறியலில் ஈடுபட்ட கமலாயியின் உறவினர்கள் சுரேஷ் உள்பட 20 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story