இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்


இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
x
தினத்தந்தி 16 Jan 2018 4:15 AM IST (Updated: 16 Jan 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியையொட்டி மயிலாப்பூரில் நேற்று விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கியது.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 9-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வருகிற 24-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 24 விவேகானந்தர் ரதங்கள் வடிவமைக்கப்பட்டு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் முன்பு நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டன.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்தானந்தஜி மகராஜ் பூஜை செய்து விவேகானந்தர் ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் ரதங்கள் கோவிலின் 4 மாட வீதிகளை வலம் வந்தன. ரதங்களில் விவேகானந்தரின் சிலைகளும், போதனைகளும் இடம் பெற்று உள்ளன.

இந்த ரதங்கள் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று விவேகானந்தரின் போதனைகளை பரப்ப உள்ளன.

இதுகுறித்து இந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை அறங்காவலர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாவது:-

இந்து ஆன்மிக கண்காட்சி குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரதங்கள் 17-ந் தேதி (நாளை) முதல் 25-ந் தேதி வரை 9 நாட்கள் 1,200 பள்ளிகளுக்கு சென்று 3 லட்சம் மாணவர்களை சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தனிமனிதன், சமுதாயம் மற்றும் நாட்டுநலன் கருதி ஒரு பேரியக்கமாக யாத்திரை நடத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடியும் என்ற ஆர்வத்தை அனைவரிடமும் வளர்க்க முடியும். 6 பண்புகளின் விளக்கங்களும் ரதத்தில் தெரிவித்து இருப்பதன் மூலம் பார்வையாளர்கள் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள இந்த யாத்திரை உதவும்.

ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சியையொட்டி தப்பாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இந்து ஆன்மிக கண்காட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story