திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:37 PM GMT (Updated: 15 Jan 2018 11:37 PM GMT)

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், கந்தசாமி ஆகியோர் தலைமையில் 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குற்றங்களை தடுப்பதற்காக சாதாரண உடையிலும் போலீசார் வலம் வந்தனர்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது.

காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது. மதியம் உச்சிகால தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்துக்கு சென்றார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமி ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்ந்தார்.

காணும் பொங்கலையொட்டி, திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுற்று வட்டார பகுதி மக்கள் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு சென்றனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கும், புதிய ஆற்றுப்பாலத்துக்கும் இடையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, சமதளப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாலையில் அங்கு ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். மேளதாளம் முழங்க பொதுமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மின்விளக்கு, குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிமொழி செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று விளாத்திகுளம் வைப்பாற்றிலும், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு கடற்கரை பகுதிகளிலும் மாலையில் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் வந்தனர்.

Next Story