சிங்கம்புணரியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு


சிங்கம்புணரியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:15 PM GMT (Updated: 17 Jan 2018 7:20 PM GMT)

சிங்கம்புணரியில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறையின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லதா ஆய்வு செய்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை, வட்டார தோட்டக்கலை துறை வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அதன்படி சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூரில் உள்ள சிவகங்கை தென்னை உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலம் குறைந்த விலையில் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு விடும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்து, வேளாண் எந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளையும், உபயோகிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டருக்கு தென்னை உற்பத்தியாளர்கள் கம்பெனி தலைவர் சேவுகப்பெருமாள் விளக்கம் அளித்தார்.

பின்னர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் எஸ்.வி.மங்கலத்தில் 1.5 எக்டர் நிலப்பரப்பில் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்க்கப்பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட அடர் நடவு இமம் பசந்த் மற்றும் அல்போன்சா மா மரக்கன்றுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது மா மரக்கன்றுகள் சொட்டு நீர் பாசன முறையில் வளர்க்கப்படுவதை தோட்டக்கலை துறை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் அழகுமலை மற்றும் சிங்கம்புணரி வட்டார தோட்டக்கலை அலுவலர் மனோகரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து வேளாண் துறை சார்பில் செல்லியம்பட்டியில் செக்கு எண்ணெய் தயார் செய்யும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து கூட்டு பண்ணையம் விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் மற்றும் தென்னை விவசாயிகள் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிங்கம்புணரி கோவில் மாடுகளை பாதுகாக்க கோசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story