ஈரோட்டில் ரெயில் முன் பாய்ந்து கணவன்- மனைவி தற்கொலை


ஈரோட்டில் ரெயில் முன் பாய்ந்து கணவன்- மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2018 4:00 AM IST (Updated: 18 Jan 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரெயில் முன் பாய்ந்து கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு,

ஈரோடு ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 56). இவருடைய மனைவி ராஜாமணி (45). இவர்கள் திருமண விழாவில் சமையல் செய்யும் வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தை கிடையாது.

கடந்த சில ஆண்டுகளாக மாதேஸ்வரன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மேலும், அவர் கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை மாதேஸ்வரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராஜாமணி உடனிருந்து கவனித்து வந்தார். அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் அன்று மாலையில் வீட்டிற்கு திரும்பினர்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாலும், கடன் தொல்லையாலும் கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாதேஸ்வரன், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனது அண்ணனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தானும், ராஜாமணியும் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்திவிட்டதாக கூறிஉள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து கார் மூலம் இரவு 8 மணிஅளவில் ஈரோட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டில் மாதேஸ்வரனையும், ராஜாமணியையும் காணவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் அவர் விசாரித்தார்.இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 2 பேர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக மாதேஸ்வரனின் அண்ணன் அங்கு சென்று பார்த்தார். அப்போது மாதேஸ்வரனும், ராஜாமணியும் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மாதேஸ்வரனும், ராஜாமணியும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது,’ தெரிய வந்தது. பின்னர் அவர்களுடைய உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story