ஐ.ஓ.சி. நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்


ஐ.ஓ.சி. நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Jan 2018 4:00 AM IST (Updated: 20 Jan 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஓ.சி. நிறுவனத்தை கண்டித்து சென்னையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம்,

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐ.ஓ.சி.) நிறுவனத்தின் மசகுஎண்ணெய் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, மசகு எண்ணெய் வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்லும் பணி, ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக கடந்த 20 வருடமாக, இரு வழி போக்கு வாடகை கட்டணம் தரப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, வாடகை முறை ஒப்பந்தத்தை, அந்த நிறுவனம் மாற்றி அமைக்க முடிவு செய்து உள்ளது.

அதாவது, சரக்கை சேர்க்க வேண்டிய இடத்தில், இறக்கி விட்டு வரும்போது, லாரிகளுக்கான கட்டணம் கிடையாது. சரக்கை ஏற்றி செல்லும்போது மட்டும்தான் வாடகை கட்டணம் வழங்கப்படும் என ஐ.ஓ.சி. முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த ஒருவழி போக்கு கட்டணத்தை அமல்படுத்த கூடாது என்று கோரி நேற்று, ஐ.ஓ.சி. மசகு எண்ணெய் தயாரிப்பு ஆலையின் நுழைவு வாயில் அருகே, இந்தியன் ஆயில் லூப் பல்க் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி, அந்த சங்கத்தின் செயலாளர் லோகையன் கூறும்போது, “வட மாநிலத்தவர்களை வாழ வைக்கவே, இந்த ஒரு வழி போக்கு கட்டணம். இந்த திட்டத்தை அமல்படுத்தினால், நாங்கள் டேங்கர் லாரிகளை விற்றுவிட்டு செல்ல வேண்டிய நிலை வரும். சரக்கை இறக்கி விட்டு வரும் டிரைவர்களுக்கு, இருமுறை வாடகைப்படி தர வேண்டும். ஒரு முறை படி தந்தால், டிரைவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள். இதனால் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. முதன் முதலில் இந்த திட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்திட முயற்சிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது” என்றார். 

Next Story