சத்தியமங்கலம் அருகே குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்


சத்தியமங்கலம் அருகே குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:30 AM IST (Updated: 3 Feb 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே காளியூர் உள்ளது. இங்குள்ள முத்தம்பாளையம் காலனியில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கே.என்.பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி அங்கு சென்று பொதுமக்களிடம், ‘இந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ளது. எனவே அந்த வீடுகளை காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலகெடுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீசு கொடுத்தார். ஆனால் காலி செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்றார்கள். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் 15-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அகற்றப்பட்டன.

குடிசைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பெண்கள் 60 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் கே.என்.பாளையம் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரோட்டில் ஒன்று கூடினார்கள். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

மேலும் அவர்கள், “வேண்டாம், வேண்டாம், வீடுகளை அகற்ற வேண்டாம்.” என்று கோஷம் போட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் பொன்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி ஆகியோர் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் கூறும்போது, ‘நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருந்ததால் உங்கள் வீடுகள் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக உங்களுக்கு வீடுகள் கட்ட மாற்று இடம் ஒதுக்கப்படும்.’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மதியம் 1.30 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story