வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் நண்பர்கள் ஆத்திரம்: 30 வீடுகள் சூறை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் நண்பர்கள் ஆத்திரம்: 30 வீடுகள் சூறை
x
தினத்தந்தி 2 Feb 2018 10:15 PM GMT (Updated: 2 Feb 2018 8:06 PM GMT)

திருக்கோவிலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அவருடைய நண்பர்கள் வீடுகளை சூறையாடி, இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). டிரைவரான இவர் அதேஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு ஓட்டி வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு மணிகண்டன் தேவனூர் கிராமம் வழியாக டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவும், டிராக்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவில் பயணம் செய்த புலிக்கல் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ஆனந்தாயி (32) என்பவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது டிராக்டர் டிரைவர் மணிகண்டனிடம் இருந்து மருத்துவ செலவுக்காக ரூ. 4,500-ஐ அங்கிருந்தவர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் ஆனந்தாயின் உறவினர்கள் டிராக்டர் உரிமையாளர் செல்வராஜை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறி, மருத்துவ செலவுக்கு ரூ.25 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் கொடுத்து விட்டு மீதி தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து செல்வராஜ், டிரைவர் மணிகண்டனிடம் உன்னால் எனக்கு பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் டிராக்டர் உரிமையாளர் தன்னை திட்டியதை தனது நண்பர்களான அதேஊரை சேர்ந்த சீனிவாசன், விஜயகுமார் (21) ஆகியோரிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் புலிக்கல் கிராமத்துக்கு சென்று, ஆனந்தாயின் உறவினர்களிடம், ஏன் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கிறீர்கள்? என கேட்டு தகராறு செய்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து ஆனந்தாயின் உறவினர் ஒருவர், விஜயகுமாரின் தந்தை ராமலிங்கத்திடம் தெரிவித்தார்.

இதனால் ராமலிங்கம் தனது மகன் விஜயகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த அவரது நண்பர்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து விஜயகுமாரின் நண்பர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் இரவு புலிக்கல் கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி உடைத்து சேதப்படுத்தினர். மேலும் 30 வீடுகளையும் அடித்து நொறுக்கி, சூறையாடி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விஜயகுமாரின் நண்பர்களான வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியதுரை (23), சீனுவாசன்(24), சுரேஷ் (28), ராஜ்குமார் (23), குமரேசன் (22) மற்றும் பாலாஜி (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடலை திருக்கோவிலூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் குறித்தும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து இரு கிராமங்களிலும் பதற்றம் நீடிப்பதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், வீமராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்னர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story