அண்ணாவின் பெருந்தன்மை


அண்ணாவின் பெருந்தன்மை
x
தினத்தந்தி 3 Feb 2018 3:25 PM IST (Updated: 3 Feb 2018 3:25 PM IST)
t-max-icont-min-icon

எழுத்தில், பேச்சில், இயல்பில் மறைந்த முதல்- அமைச்சர் அண்ணாவுக்கு இணையாக வேறு ஒருவரையும் காட்ட முடியாது. அவர் கட்சி அரசியலை கடந்து தமிழர்கள் அனைவரும் போற்றக்கூடிய மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதையும் மறுக்க முடியாது.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது திராவிடர் கழகத்தையோ, பெரியாரையோ அவர் தாக்கி பேசியதில்லை. இரண்டு கழகங்களுக்கும் ஒரே கொள்கை தான். இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கி என்றார். பெரியாரை அண்ணா தாக்கி பேசாத நிலையிலும், பெரியார் அண்ணாவைப் பற்றியும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் மோசமாகத் திட்டி பேசி வந்தார். அதைப்பற்றி அண்ணாவிடம் தோழர்கள் சொல்லியபோது, ‘பெரியார்தானே அப்படிப் பேசுகிறார். பரவாயில்லை. காட்டில் உள்ள யானை, தனது குட்டியை தூக்கிப்போட்டு தாக்கும். எதெற்கென்றால், எதிரிகளின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளக் குட்டியை பழக்குவதற்காகத்தான் அப்படித் தாக்கும். அதைப்போல நாமும் எதிரிகளின் ஏச்சையும், பேச்சையும் தங்கிக்கொள்ளவே நம்மை பெரியார் பழக்குகிறாரே தவிர வேறொன்றும் இல்லை. பெரியார் பேச்சுக்கு பதில் சொல்லி யாரும் மேடையில் பேச வேண்டாம்’ என்று அண்ணா சொன்னார்.

ஈ.வி.கே.சம்பத் கட்சியை விட்டுப் பிரிந்து போனபோது, ‘எனது கடுக்கனில் எண்ணெய் இறங்கி விட்டது. அதை சுத்தப்படுத்துவதற்காகக் கழற்றி வைத்திருக்கிறேன். மீண்டும் கடுக்கனை அணிவேன்’ என்றார். சம்பத்தை குறைத்துப் பேசவில்லை. அதன்பிறகு அவர் தனிக்கட்சி தொடங்கி, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியபோது, இந்தி அரசிதழ் சம்பத்துக்குக் கிடைக்கவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு டெல்லியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த சம்பத் என்னும் நாகை மாவட்டம் வாழக்கரையைச் சேர்ந்த சம்பத் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டார் ஈ.வி.கே.சம்பத். இந்த சம்பத் அந்த சம்பத்திடம் தொலைபேசியில் பேசியபோது டெல்லி சம்பத் அருகிலேயே அண்ணா இருந்திருக்கிறார். உடனே அண்ணா, அந்த சம்பத்திடம், ‘உடனே இந்த கெசட்டை வாங்கி அனுப்பிவிட்டு மறுவேலை பார்’ என்றாராம். ஈ.வி.கே.சம்பத் வேறு கட்சி தொடங்கி இருந்த போதிலும், நமது பொது எதிரியான இந்தியைத் தானே எதிர்க்கிறார். அவருக்கு உதவி செய்வதில் தவறில்லை என்றாராம். எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். இன்று (பிப்ரவரி 3) அண்ணாவின் நினைவு தினம்.

-கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

Next Story