ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 350 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 350 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:32 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 350 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 10-ந் தேதி ஆர்ப்பாட்டமும், 23-ந் தேதி தர்ணா போராட்டமும் நடைபெற்றது.

இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் 7-ந் தேதியும், 8-ந் தேதியும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியன வெறிச்சோடி காணப்பட்டன.

கோரிக்கைகள்

இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-

* வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

* பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

* வருவாய் கிராமம், உள்வட்டம், வட்டம், கோட்டம், மாவட்டம் ஆகியவற்றை மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக உருவாக்க வேண்டும்.

* பேரிடர் மேலாண்மை பணிக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, “எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 350 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்”, என்றனர். 

Next Story