வீட்டு பிரச்சினையில் தீக்குளித்து கொத்தனார் தற்கொலை


வீட்டு பிரச்சினையில் தீக்குளித்து கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2018 4:30 AM IST (Updated: 20 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு பிரச்சினையில் தீக்குளித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி லீலாவதி என்கிற மனைவியும், 11-ம் வகுப்பு படிக்கும் தயாநிதி என்கிற மகனும், 5-ம் வகுப்பு படிக்கும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். பிரகாஷ், தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் தனது பெரியம்மா சரஸ்வதியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பிரகாஷ் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார். இதனை அவரது மனைவி, குழந்தைகள் தடுத்தனர். ஆனால், அவர்களை தள்ளி விட்டு, விட்டு வீட்டில் உள்ள அறைக்கு ஓடி சென்ற பிரகாஷ், கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டு உடலில் தீ வைத்து கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பிரகாஷ் மீது எரிந்த தீயை அணைத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிரகாசுக்கும், அவரது பெரியம்மா சரஸ்வதிக்கும் இடையே அவர்கள் வசித்து வந்த வீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து சரஸ்வதி ஏற்கனவே கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனால் அந்த வீட்டை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே போய்விடுவோமோ? என்ற பயத்தில் பிரகாஷ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story