ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும்


ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும்
x
தினத்தந்தி 20 Feb 2018 12:19 AM GMT (Updated: 20 Feb 2018 12:19 AM GMT)

கும்மிடிப்பூண்டியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் என்று கூறினார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். டிசம்பர் மாதமே எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். அப்படி வரும்போது கும்மிடிப்பூண்டி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் 1 லட்சம் ஓட்டுக்கு மேல் பெறவேண்டும். பா.ம.க.வை எதிர்க்கும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. டெபாசிட் வாங்கக் கூடாது என்பது என்னுடைய ஆசை. இது நடக்க கூடியதுதான். பேராசை அல்ல.

தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி பா.ம.க.வுக்கு மட்டும்தான் உண்டு. இதை நான் சொல்லவில்லை. கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

சாருஹாசனுக்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பார்த்ததும், பேசியதும் கிடையாது. உள்ளது உள்ளபடியே எதிர்காலத்தை கணிக்கக் கூடிய ஆற்றல் சாருஹாசனுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். நடக்கப்போவதை அவர் சொல்லி இருக்கிறார்.

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும். ஆனால் பா.ம.க. எதிர் வருகிற எந்த தேர்தல் ஆனாலும் 40 முதல் 50 சதவீத வாக்குகளை வாங்குவோம். அந்த அளவுக்கு மக்கள் மனம் மாறி உள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பசுமை தாயக அமைப்பாளர் பிரபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் குபேந்திரன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்துக்கு பிறகு டாக்டர் ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:-

கும்மிடிப்பூண்டி அருகே 30 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவில் ஸ்ரீசிட்டி என்ற பகுதி சிங்கப்பூர் போல் உள்ளது. நிறைய வெளிநாட்டு முதலீடுகள் அங்கு வந்து உள்ளது. நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு நிறைய பேருக்கு வேலை கொடுக்கப்பட்டு உள்ளது.

அந்த மாதிரியான நிலைமை தமிழ்நாட்டில் வரவில்லை. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஊழல் செய்வதுதான் அவர்களுக்கு முதன்மையான தொழிலாக உள்ளது. இங்கு இருக்கிற சிப்காட்டில் கூட ஒவ்வொரு தொழிற்சாலைகளாக மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு எந்த துறையிலும் வளர்ச்சி இல்லை. அதுவும் முதன்மை தொழில் என்று சொல்கின்ற எல்லோருக் கும் சோறு போடுகின்ற வேளாண்மை தொழிலில்கூட வளர்ச்சி இல்லை. ஆற்று நீர் உரிமைகளை எல்லாம் தாரை வார்த்தது இந்த திராவிட கட்சிகள்தான்.

உச்சநீதிமன்றத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் காவிரி நீர் நமக்கு குறைந்து போய்விட்டது. இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு விவசாயிகளை பற்றி கவலைப்படுவது இல்லை. 5, 6 வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியோடு வாழவில்லை என்றால் நாட்டு மக்கள் சரியாக வாழ முடியாது. எந்த முன்னேற்றமும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story