காணாமல்போன நிலா-சுபா


காணாமல்போன நிலா-சுபா
x
தினத்தந்தி 25 Feb 2018 6:58 AM GMT (Updated: 25 Feb 2018 6:58 AM GMT)

பூர்ணிமா சமையலறையில் வேலையை முடித்துவிட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டே படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

பூர்ணிமா சமையலறையில் வேலையை முடித்துவிட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டே படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

அங்கு தன்னுடைய மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு அருண் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். இசையும், சிரிப்பொலியும், சிறு கூச்சல்களுமாக ஒலி கேட்டது.

“ஏய், என்னை விட்டுட்டு என்ன சினிமா பார்க்கற..?” என்றபடி பூர்ணிமா அவன் தலையில் செல்லமாகக் குட்டினாள்.

“சினிமா இல்ல பூர்ணா. நாளைக்கு அந்த வீர விளையாட்டு ஆரம்பிக்குது இல்ல..? இதுவரைக்கும் என்ன மாதிரி விளையாட்டுலாம் நடந்திருக்கு, மத்தவங்க எப்படி அதுல பங்குகொண்டிருக்காங்கனு பார்த்திட்டிருந்தேன்.. நீ படுக்க வர வரைக்கும் பொழுது போகணுமில்ல..? நான் குளிச்சிட்டு தயாரா இருக்கேன்.. நீயும் குளிச்சிட்டு பூப்போல வந்துட்டா.. நம்ம விளையாட்டை இங்க ஆரம்பிச்சுரலாம்..” என்று படுக்கையைத் தட்டிக் காட்டி, கண்ணடித்தான் அருண்.

“டேய், நாளைக்கு முக்கியமான நாளு. நான் மட்டும் ரெடியா இருக்க வேண்டாமா..? நகரு.. நகரு.. நீ பார்த்ததைலாம் நானும் பார்க்கறேன்..” என்று பூர்ணிமா அவன் அருகில் அமர்ந்தாள்.

“ஏய், நாம சேர்ந்து பார்க்கறதுக்கு வேற விதமான வீடியோல்லாம் இருக்கு..” என்று கொஞ்சலாக சொல்லிப் பார்த்தான், அருண்.

“ச்சீச்சீ.. இப்ப அந்த பேச்சை எடுக்காத.. இன்னிக்கு அந்த விஷயத்துல விரதம்.. நாளைக்கு நாம அந்த வீர விளையாட்டுல எப்படியாவது ஜெயிச்சுடனும்.. அதுல முழு சக்தியோட கலந்துக்கணும்னா, இன்னிக்கு அநாவசியமா களைச்சுப் போகாம இருக்கணும்..” என்று பூர்ணிமா உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

அருண் தோள்களைக் குலுக்கினான். தன் மடிக்கணினியைத் திறந்துவைத்து, அவன் பார்த்துக்கொண்டிருந்த விளையாட்டுகளை ஓடவிட்டான். பூர்ணிமா முழு கவனத்தையும் அதில் பதித்தாள்.

***

மறுநாள்.

குறிப்பிட்ட இடத்தில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் பேருந்து காத்திருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் ஏறியவுடன், புறப்பட்டது.

மொத்தம் பதினைந்து ஜோடி நபர்கள் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அருண், பூர்ணிமாவைத் தவிர, இன்னும் இரண்டு ஜோடி மட்டும் கணவன் மனைவியாக வந்திருந்தார்கள். பெரும்பாலான மற்றவர்கள் திடமான இளைஞர்களாகவும், நண்பர்களாகவும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம் முடிந்து, சென்னை புறநகர்பகுதியில் அவர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரிகள் வரவேற்றார்கள். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

“எல்லோரும் இங்க கவனியுங்க..” என்று குரல் வந்ததும், எல்லோரும் துடிப்பானார்கள். ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்திருந்த இளம்பெண் அறிமுகப்படுத்தப்பட்டாள்.

“இவங்க பேரு ஷீலா. முதல் கட்ட போட்டில இவங்கதான் நடுவரா இருக்கப் போறாங்க.. உங்களை கண்காணிச்சு, வெற்றி பெற்றவர்களை இவங்கதான் தேர்ந்தெடுப்பாங்க.. இவங்க முடிவுதான் இறுதியானது..”

ஷீலா கூந்தலைப் பின்னாமல் விட்டிருந்தாள். காற்றில் அது பறந்துவந்து அவள் முகத்தை மூட முயற்சிப்பதும், நான்கு விரல் களால் அவள் அதை ஒதுக்கிவிடுவதும் இளைஞர்களின் கவனத்தைக் கூடுதலாகக் கவர்ந்தது.

முதல் கட்டப் போட்டியின் விதிமுறைகள் விளக்கப்பட்டன. மைதானத்தின் மத்தியில் சுமார் ஐம்பதடி நீளமும், முப்பதடி அகலமும்கொண்ட மிகப்பெரிய நீச்சல்குளம் காணப்பட்டது. அந்த நீச்சல்குளத்தின் மறு கரைக்கு அருகில் செங்குத்தாக சில மரப்பலகைகள் நிற்கவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மரப்பலகையிலும், இரண்டு பெரிய துளைகள் போடப்பட்டிருந்தன. துளைகள் வட்டமாகவோ, சதுரமாகவோ இல்லாமல் ஒரு மனிதனை நிற்கவைத்து, சுற்றி கோடு போட்டது போன்ற வடிவத்தில் வெட்டப்பட்டிருந்தது. அதாவது, ஓர் ஆள் நுழைந்து, வெளியேறும் அளவு ஒவ்வொரு துளையும் அமைந்திருந்தது.

அந்த நீச்சல் குளத்தில் பதினைந்து செவ்வக மிதவைகள் மிதக்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஜோடியும் ஒரு மிதவை மீது நிற்க வேண்டும். மிதவைகள் மறு கரையிலிருந்து இயந்திரம் மூலமாக ஒரே வேகத்தில் இழுக்கப்படும். மிதவை மீது நிற்பவர்கள் தங்களை எந்த அளவு சமநிலையோடு நிறுத்திக்கொள்கிறார்களோ, அந்த அளவுதான் அவர்கள் தண்ணீரில் விழாமல் காப்பாற்றிக்கொள்ள முடியும். மறு கரை நோக்கி மிதவைகள் இழுக்கப்படும் அதே நேரத்தில், அந்தக் கரையிலிருந்து ஆட்கள் வடிவத்தில் உள் துளையிட்ட மரப்பலகைகள் அவர்களை நோக்கி வரும். மிதவையை அந்தப் பலகை நெருங்கும்போது அதன் துளை வழியே சட்டென நுழைந்து, மறுபுறம் இறங்கிவிட வேண்டும். சரியாக துளையில் நுழைய முடியாதவர்கள் அந்த மரப்பலகையில் முட்டிக்கொண்டு கீழே தள்ளப்பட்டு, தண்ணீரில் விழுந்து விடுவார்கள்.

இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துளைகள் வழியே உரிய நேரத்தில் கடந்தால், அவர்களை மீண்டும் ஏந்திக்கொள்ள அவர்களுடைய மிதவை தயாராக இருக்கும்.

விதிமுறைகள் விளக்கப்பட, அனைவர் முகங்களிலும் புன்னகை விலகியது.

“யாரும் பயப்பட வேண்டாம்..” என்று ஷீலா குரல் கொடுத்தாள்.

“ஜோடியில யாராவது ஒருத்தர் தண்ணில விழுந்தாகூட, இன்னொருத்தர் மிதவைக்கு மேல இருந்தா, அவங்களை இழுத்துக்கலாம்.. நீச்சல் தெரியலேன்னாலும் பிரச்சினை இல்ல.. ஏன்னா, இந்தக் குளத்துல மொத்தமே அஞ்சடி ஆழம்தான்..”

“எனக்கு நல்லா நீச்சல் தெரியும் அருண்..! அதனால கவலைப்படாத..” என்று பூர்ணிமா அவனைத் தட்டிக் கொடுத்தாள்.

ஷீலா தொடர்ந்து பேசினாள். “நீச்சல் தெரியாதவங்க இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கத்துக்கறது நல்லது.. மூணாவது, நாலாவது போட்டியில நீச்சல் தேவைப்படலாம்..”

“நான் கல்லூரி நாட்கள்ல கொஞ்சம் நீச்சல் கத்துக்கிட்டேன். ஆனா, முழுசா முடிக்காம நிறுத்திட்டேன்.. இப்ப, நாளையிலேர்ந்து நீச்சல் கத்துக்கப்போறேன்..” என்றான் அருண்.

“மொதல்ல இன்னிக்கு ஜெயிக்கறதைப் பத்தி மட்டும் நினைப்போம்..” என்றாள், பூர்ணிமா.

பதினைந்து ஜோடிகளும் அவரவர் மிதவைகளில் ஏறியதும், விளையாட்டு தொடங்கப்பட்டது. கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், அன்றைய போட்டி நடைமுறையில் மிகவும் சவாலாக இருக்கப்போகிறது என்பதை பூர்ணிமா, அருண் இருவரும் உணர்ந்திருந்தார்கள்.

“ரெண்டு பேரும் ஒழுங்கா பேலன்ஸ் பண்ணி நிப்போம்..”

மிதவை மீது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கியபடி ஒருவர் மற்றவரின் தோள்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

போட்டி தொடங்கியது. ஒரே வேகத்தில் மிதவைகள் இழுக்கப்பட்டன. தங்களை சரியாக நிலைநிறுத்திக்கொள்ளாத மூன்று ஜோடிகள், ஐந்தடி கடப்பதற்குள் தண்ணீரில் கவிழ்ந்துவிட்டார்கள். இன்னும் நான்கு ஜோடிகள், பத்தடி, பதினைந்தடி வரை தாக்குப்பிடித்து, இருவரில் ஒருவர் செய்த தவறினால், நிலைகுலைந்து தண்ணீரில் விழுந்தார்கள்.

அப்படி யாராவது ஜோடியாக விழும்போது, அந்த அதிர்வில் தண்ணீர் அலைபாய்ந்து, அவர்களுக்கு இருபுறமும் இருக்கும் மிதவைகளையும் குலுக்கின. பூர்ணிமா- அருண் ஜோடியின் மிதவைக்கு அருகிலும் அப்படி ஒரு ஜோடி தடுமாறிக்கொண்டிருந்தபோது, “அவங்க விழப்போறாங்க.. நாம ஜாக்கிரதையா இருக்கணும்..!” என்று பூர்ணிமா முன்பாகவே எச்சரிக்கை விடுத்தாள். கால்களை சற்று அகட்டி நிறுத்தி, இருவரும் சமாளித்தார்கள்.

கடைசி ஐந்தடி தொலைவில் இருந்தபோது, துளையிட்ட செங்குத்தான பலகைகள் அவர்களை மோதுவது போல வந்தன.

“அருண், அது கிட்ட வந்ததும், ரெண்டு பேரும் கையை விட்டாகணும். ஏன்னா, தனித்தனி துளைதான் இருக்கு. டக்..னு அந்தப் பக்கம் போயிட்டு, ஒருத்தர் மிதவையை பிடிச்சிட்டோம்னா, அடுத்தவரை எப்படியாவது இழுத்துடலாம்..” என்றாள் பூர்ணிமா.

அந்தக் கட்டத்தில், இன்னும் நான்கு ஜோடிகள் பலகைகளால் மோதப்பட்டு, தண்ணீரில் விழுந்தார்கள். அருண், எவ்வளவோ தயாராக இருந்தும், துளையில் நுழைய முற்பட்டபோது, அவனுடைய முகத்திலும், கையிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டன. இருந்தாலும் சமாளித்து, மறுபுறம் இறங்கிவிட்டான். இறங்கும்போது, மிதவை சற்றுத் தள்ளிப்போய் இருந்தது. எப்படியோ காலை நீட்டி, அதில் ஊன்றிக்கொண்டான்.

அவனை அடுத்து பூர்ணிமா வந்தபோது, அந்தப் பலகையைப் பிடித்து, மிதவை மேற்கொண்டு இழுபடாமல் அவன் பார்த்துக்கொள்ள, பூர்ணிமாவும் பத்திரமாக இறங்கினாள். இருவரும் முன்புபோல் பரஸ்பரம் தோள்களைப் பிடித்துக்கொண்டார்கள். ஆனால், அந்த முனைப்புகளில், கடல் அலைகளில் மிதக்கும் கட்டுமரம் போல மேலும், கீழுமாக மிதவை ஆடியது. அருணுக்கு திடீரென்று மிதவையிலிருந்து பிடிப்பு நழுவியது.

-தொடரும்

Next Story