போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு


போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2018 4:30 AM IST (Updated: 26 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் டவுன் காஞ்சி கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ஒரு நகைக்கடை தொழிலாளியின் மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவதி கணவனின் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இதுபற்றி ரேவதியின் தந்தை சேகர் ராசிபுரம் போலீசில் கோனேரிப்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கூட்டிச் சென்றுவிட்டதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராசிபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ராசிபுரம் போலீசார் ரேவதியை கூட்டிச் சென்றதாக கூறப்படும் அந்த நபரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த ரேவதி நேற்று ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் என் கணவருக்கும் எனக்கும் பிடிக்கவில்லை. அவர் மீது வழக்கு போடுங்கள் என்றும், எனது தந்தை கொடுத்த புகாரின் பேரில் யாரையாவது அழைத்து வந்தீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது போலீசார் யாரையும் அழைத்து வரவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்ற ரேவதி, திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதைப் பார்த்த போலீசார் ரேவதியை உடனடியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் எதிரில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story