வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க மானியம்


வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க மானியம்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:45 PM GMT (Updated: 25 Feb 2018 10:28 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் ‘நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்‘ என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. 2016-17-ம் நிதியாண்டில் முதல் கட்டமாக 10 மானாவாரி தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டது.

அதில் 2017-18-ம் ஆண்டில், தொகுப்பின் நுழைவு கட்டிட பணிகளான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், கோடை உழவுப்பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாய குழுக்களுக்கு வேளாண் கருவிகள் மற்றும் எந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க மானியம் வழங்குதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து அதிக லாபம் பெறும் வகையில், மதிப்புக்கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொகுப்புகளில் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 2017-18-ம் ஆண்டில் 75 சதவீத மானியத்தில் 3 தொகுப்புகளில் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

மானாவாரி தொகுப்புகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உள்ள சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் போன்ற விளை பொருட்களை மதிப்புக்கூட்டும் வகையிலான மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மையம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.

வேளாண் விளைபொருட்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனைக்கேற்ற வகையில் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் வாங்குவதற்கும் மற்றும் அதற்குரிய பணி மூலதனம் ஆகியவை உள்ளிட்ட மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மீதியுள்ள 25 சதவீத தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழு செலுத்த வேண்டும். தேவையான கட்டிட வசதிகள் இருக்க வேண்டும்.

மதிப்புக்கூட்டும் எந்திர மையம் அமைப்பதற்கு ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவினை தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டுக்குழுவுக்கு வழங்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டுக்குழு விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விருத்தாசலம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

விண்ணப்பித்துள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கான தேவையான கட்டமைப்புகள், தேவைப்படும் எந்திர விவரங்கள் மற்றும் ஆவணங்களை உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படும்.

பின்னர் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செயற்பொறியாளரால் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் வழங்கிட பணி ஆணை வழங்கப்படும். எந்திர மையம் அமைக்கப்பட்ட பின்னர் உதவி செயற்பொறியாளரால் ஆய்வு செய்யப்பட்டு எந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறது என்ற அறிக்கையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவிடம் இருந்து பெற்று நிறுவனங்களுக்கு தொகுப்பு மேம்பாட்டுக்குழுவின் மூலம் மானியத்தொகை விடுவிக்கப்படும்.ஆகவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக்குழுவுக்கு அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மங்களூர் வேளாண்மை உதவி இயக்குனர், விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை), கடலூர் செயற்பொறியாளர் ஆகியோரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Next Story