செம்பரம்பாக்கம் ஏரியில் பூட்டப்பட்டுள்ள கதவுகள் மீண்டும் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் பூட்டப்பட்டுள்ள கதவுகள் மீண்டும் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வழிகளில் உள்ள 3 கதவுகள் பூட்டப்பட்டுள்ளது. இந்த கதவுகள் மீண்டும் திறக்கப்படுமா? என மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது செம்பரம்பாக்கம் ஏரி. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கன மழையால் இந்த ஏரி நிரம்பி வழிந்து, உபரிநீர் வெளியேறியதில் சென்னை மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. 24 அடி உயரமும் கொண்டது.

ஏரியின் பாதுகாப்பு கருதி 21 அடியை நீர் தொட்டவுடன் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். செம்பரம்பாக்கம் ஏரியால் உள்ளூர் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளால் உள்ளூர் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு முக்கிய காரணம், வெளி வட்டசாலை, நந்தம்பாக்கம், நசரத்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் 3 வழிகளில் அமைக்கப்பட்டுள்ள கதவுகளை பூட்டியது தான். செம்பரம்பாக்கம் ஏரியில் காற்று வாங்குவதற்கும், நடைபயிற்சி செல்வதற்கும் குன்றத்தூர், பல்லாவரம், அனகாபுத்தூர், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் பெரும்பாலான மக்கள் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல் குடும்பத்துடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து பொழுதை கழித்து வந்தனர். இதனால் காலை, மாலை நேரங்களில் ஏரிக்கரையின் மீது பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

அதுமட்டுமின்றி சோமங்கலம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் திருமழிசை சிப்காட் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் மீது அமைக்கப்பட்டுள்ள சாலையின் மீது போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக சென்று வந்தனர்.

தற்போது சில மாதங்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் முக்கியமான 3 வழிகளில் அமைக்கப்பட்டுள்ள கதவுகள் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மேலும் இந்த ஏரியில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். கதவுகள் மூடப்பட்டுள்ளதால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

மீன்பிடி தொழிலை தவிர தங்களுக்கு வேறு தொழில் தெரியாது. இந்த ஏரியால் எங்களின் அன்றாட வாழ்வாதாரம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக ஏரிக்கு செல்லும் முக்கியமான 3 பகுதிகளில் உள்ள கதவுகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கு முன்பு ஏரிக்கு வரும் பொதுமக்கள் மீன்கள் வாங்கி செல்வார்கள். அதுமட்டுமின்றி அங்கு பிடிக்கும் மீன்கள் சுடச்சுட வறுத்துக் கொடுப்பதால் ஏராளமானோர் வாங்கி உண்பார்கள். மேலும், திருமழிசை சிப்காட் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் இந்த வழியாக நெரிசல் இன்றி சென்று வந்தனர். தற்போது ஏரிக்கு செல்லும் கதவுகள் பூட்டப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

ஏரிக்கரையின் மீது அமர்ந்து மது அருந்துவது, வாலிபர்கள் தங்களது காதலியை அழைத்து வந்து எல்லை மீறுவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. ஏரிக்கரையின் மீது லோடு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் ஏரிக்கரை பலவீனமாகி விடும். போதையில் சிலர் ஏரியில் குளித்து உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

மேலும், பொதுமக்கள் ஏரியில் துணி துவைப்பதால் நீரின் தன்மை மாசுபடுகிறது. இதனால் ஏரிக்கு செல்லும் வழிகள் பூட்டப்பட்டுள்ளது. ஏரிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது வாகனங்களை கேட்டின் முன்பு நிறுத்திவிட்டு நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசம்பாவித செயல்கள் நடைபெறுவதால் ஏரிக்கு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீசார் அவ்வப்போது இங்கு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், அந்த பகுதிகளில் சமூக விரோத செயல்கள் எப்படி நடக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சிலருக்காக பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஏரிக்கு செல்லும் வழிகளில் உள்ள கதவுகள் பூட்டப்பட்டுள்ளது. எனவே ஏரிக்கு செல்லும் கதவுகளை மீண்டும் திறந்து பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story