பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ‘திடீர்’ தர்ணா


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ‘திடீர்’ தர்ணா
x
தினத்தந்தி 26 Feb 2018 11:30 PM GMT (Updated: 26 Feb 2018 5:55 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் ‘திடீர்’ தர்ணா போராட்டத்தினால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

வந்தவாசி தாலுகா பெரணமல்லூரை அடுத்த அரியபாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன், பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவருடன் சில பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத் திறனாளியான விஜயனை தாக்கிய ஊராட்சி மன்ற உதவியாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பெரணமல்லூர் ஒன்றிய ஆணையாளர், துணை ஆணையாளர், பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அங்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், எங்கள் ஊராட்சியில் தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்குவது இல்லை. இதுகுறித்து தட்டி கேட்ட போது விஜயனை தாக்கிய அரியபாடி ஊராட்சி மன்ற உதவியாளர் முருகன் மற்றும் அவரது மனைவி பத்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26-ந் தேதி புகார் அளித்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து 28-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தோம். அதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மக்கள் குறைதீர்வு கூட்டத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோதே கலெக்டரின் காலில் விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் மற்றும் அலுவலர்கள், போலீசார் அவர்களை தூக்கி விட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற உதவியாளர் முருகனை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story